மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்!!

கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடத்த முடியாத சூழல் உள்ளதாகவும், தேர்வுகள் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், வரும் செப்டம்பருக்குள் செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என்ற மத்திய அமைச்சகத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்துவது சிரமம் என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று அச்சத்தின் காரணமாக பல மாணவர்கள், பிற மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு சென்றுவிட்ட நிலையில் தேர்வு மையத்திற்கு வருவது கடினம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் முறையில் தேர்வு நடத்துவதில் சில சிக்கல்கள் உள்ளதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுமட்டுமல்லாது, தமிழகத்தில் பல கல்லூரிகள் மற்றும் விடுதிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளதையும் அவர் கடிதத்தில் எடுத்துக் காட்டியுள்ளார். எனவே பருவத்தேர்வு விஷயத்தில் மாநில அரசு எடுக்கும் முடிவுகளை உயர்கல்வி நிறுவனங்கள் ஏற்று கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version