முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் சுற்றுப் பயண விவரம்

தேர்தல் தேதி, வேட்பாளர்கள் எல்லாம் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகளின் பிரசாரங்கள் முழு வீச்சில் துவங்கிவிட்டன. இந்நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 22ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப் பயணத்தை துவக்குகிறார். அவரின் பயண விவரங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

மார்ச் 22ம் தேதி காலை 9 மணிக்கு, சேலம் மாவட்டம் கருமந்துறையில் உள்ள செல்வ விநாயகர் திருக்கோயிலிலிருந்து, பிரசார பயணத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்குகிறார். அதன் பின்னர், பகல் 12 மணிக்கு வாழப்பாடியில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து, பகல் 1 மணிக்கு, அயோத்தியாபட்டினத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் அவர், மாலை 3.15 மணிக்கு சேலத்திலிருந்து புறப்பட்டு, 4 மணிக்கு, தர்மபுரி மாவட்டம் தொப்பூர் வந்தடைந்து, அங்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

பின்னர் அங்கிருந்து மாலை 5 மணிக்கு நல்லம்பள்ளி செல்லும் முதலமைச்சர், அங்கு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து, 5.30 மணிக்கு தர்மபுரி டவுன் பகுதியில் வாக்கு சேகரிக்கும் அவர், மாலை 6.30 மணிக்கு பென்னாகரம் பகுதியில் பிரசாரம் செய்ய உள்ளார். இரவு 7.30 மணி அளவில் பாப்பாரப்பட்டி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு வாக்கு சேகரிப்பை முடித்துக்கொண்டு, இரவு 8.30 மணிக்கு பாலக்கோடு சென்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அங்கிருந்து, இரவு 9.15 மணிக்கு காரிமங்கலம் வந்தடையும் முதலமைச்சர், அங்கு, அன்றைய தேர்தல் பரப்புரையை முடிக்கிறார்.

மார்ச் 23ம் தேதி, வேலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் முதலமைச்சர், காலை 9 மணிக்கு சேலம் கூட்ரோடிலும், 9.30 மணிக்கு திருப்பத்தூரிலும், 10 மணிக்கு ஆசிரியர் நகரிலும் பிரசாரங்களை மேற்கொள்கிறார். பின்னர், காலை 10.30 மணிக்கு, ஜோலார்பேட்டை செல்லும் அவர், அங்கு வாக்கு சேகரிப்பை முடித்துக்கொண்டு, 11.30 மணிக்கு வாணியம்பாடி டவுன் பகுதியில் பிரசாரம் செய்கிறார். பகல் 11.40 மணியிலிருந்து 1 மணி வரை, ஆம்பூர் டவுனில், நான்கு இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் முதலமைச்சர், மாலை 4 மணி அளவில், ஆம்பூர் பைபாஸ் பகுதியிலும், 5 மணிக்கு உமாராபாத் பகுதியிலும், 6 மணிக்கு பேரணாம்பட்டிலும், மாலை 7 மணிக்கு குடியாத்தம் பஜார் பகுதியிலும் பிரசாரம் செய்கிறார். பின்னர், இரவு 7.30 மணிக்கு, கே.வி. குப்பம் பகுதிக்கு சென்ற வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர், 8 மணிக்கு லத்தேரி பகுதியில் பிரசாரம் மேற்கொள்கிறார். இரவு 8.30 மணிக்கு சித்தூர் பேருந்து நிலையத்திலும், 9 மணிக்கு வேலூர் புது மாநகராட்சி பகுதியிலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். அன்றைய நாளின் கடைசி பகுதியாக மண்டித்தெரு சென்று, அங்கு பிரசாரம் செய்கிறார்.

மார்ச் 24ம் தேதியும் தொடரும் முதலமைச்சரின் சூறாவளிப் பயணம், காலை 8.30 மணிக்கு வேலூர் மாவட்டம் வள்ளளார் பகுதியில் துவங்குகிறது. பின்னர், 9.30 மணியளவில் ஆற்காடு பேருந்து நிலையம் சென்று பிரசாரம் செய்யும் அவர், காலை 10 மணிக்கு முத்துக்கடை பேருந்து நிலையம் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். அங்கிருந்து, 10.45 மணிக்கு சோளிங்கர் பேருந்து நிலையம் செல்லும் முதலமைச்சர், 11.30 மணிக்கு பானாவரம் கூட்டுரோடு பகுதியிலும், 12 மணிக்கு காவேரிபாக்கம் பூங்காவிலும், 12.30 மணிக்கு பனப்பாக்கம் பேருந்து நிலையத்திலும், பின்னர் 1 மணியளவில் நெமிலியிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அங்கிருந்து அரக்கோணம் செல்லும் அவர், அரக்கோணம் பேருந்து நிலையத்தில், மாலை 4 மணியளவில் வாக்கு சேகரிப்பை முடித்துக்கொண்டு, 5.15 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம், திருத்தனியில் பிரசாரம் செய்ய உள்ளார். அங்கிருந்து திருவள்ளூர் சென்று, 6.15 மணிக்கு அங்கு வாக்கு சேகரிக்கிறார். இதைத் தொடர்ந்து, இரவு 7.40 மணியளவில், கும்மிடிபூண்டி சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் அவர், அங்கிருந்து பொன்னேரி சென்று, இரவு 9 மணிக்கு அங்கு பிரசாரம் மேற்கொள்கிறார். பின்னர், 9.30 மணியளவில் மீஞ்சூர் சென்று வாக்கு சேகரிக்கும் அவர், முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார்.

Exit mobile version