அனைத்து மகளிர்க்கும் சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பெண்களின் வாழ்வு மேன்மையுற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் தமிழக அரசு பல்வேறு பெண்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் பட்டியலிட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை மற்றும் பணியிடங்களில் உருவாகும் அசாதாரண சூழல் பற்றி விசாரிக்கவும், சட்ட உதவி மற்றும் ஆலோசனைகள் வழங்கவும் மாவட்டதோறும் ஒருங்கிணைந்த சேவை மையம் ஏற்படுத்தப்படுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவசர கால அழைப்புக்கு 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவை 24 மணி நேரமும் வழங்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழ்நாட்டிற்கு சிறந்த மாநில விருதும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சிறந்த மாவட்ட விருதும் கிடைத்திருப்பதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார். தேசிய அளவிலான 2019ஆம் ஆண்டிற்கான நாரி சக்தி புரஸ்கார் விருதுக்கு தமிழ்நாடு அரசு தேர்வு செய்யப்பட்டுள்ளதையும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். தன்னம்பிக்கையுடன், விடாமுயற்சியுடன் செயல்பட்டு, சோதனைகளை எதிர்கொண்டு இருளை நீக்கும் ஒளி விளக்காக பெண்கள் உயர்ந்து விளங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.