உதகமண்டலத்தில் புதிதாக கட்டப்படவிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
மத்திய அரசு தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்தது. அதனடிப்படையில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களில், கல்லூரிகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பதினொன்றாவது புதிய மருத்துவக் கல்லூரி நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் அமைய உள்ளது. மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன், தமிழக அரசின் 40 சதவீத நிதி பங்களிப்பும் சேர்த்து, கட்டட பணிகள் நடைபெற உள்ளது. இன்று நடைபெற உள்ள இந்த பணிகளின் துவக்க விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அடிக்கல் நாட்ட உள்ளார். 25 ஏக்கர் நிலப்பரப்பில், 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய மருத்துவக்கல்லூரியுடன், மருத்துவமனை அமைய உள்ளது. இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும்.