திருச்சியில், பள்ளிக்கல்வி, சட்டம், வணிகவரி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கென, 25 கோடியே 53 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் 6 இடங்களில், வகுப்பறை, ஆய்வகம் மற்றும் கழிப்பறை என, 10 கோடியே 22 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார். அதேபோல, 3 கோடியே 11 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில், சட்டக்கல்வித்துறை சார்பில், அரசு சட்டக் கல்லூரியில் ஆயிரத்து 36 சதுர மீட்டர் பரப்பளவிலான புதிய நூலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
வணிக வரி மற்றும் பதிவுத்துறை சார்பில், 94 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மண்ணச்சநல்லூர் சார்பதிவாளர் அலுவலக கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரியில், 6 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பில், 125 மாணவியர்களுக்கான தங்கும் விடுதி கட்டடத்தையும், கல்லூரியுடன் இணைந்த மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இயல் கூட்டத்தில், 3 கோடியே 69 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட செயல்முறை விளக்க அரங்கத்தை, முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், 81 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட குடும்பநலத்துறைக்கான துணை இயக்குனர் அலுவலக கட்டடம் மற்றும் 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான சமயபுரம் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வல்லரசு நாடுகளே கொரோனவை கட்டுப்படுத்த திணறி வரும் நிலையில், தழிகத்தில் தொற்று கட்டுக்குள் உள்ளதாகத் தெரிவித்தார்.