திருவள்ளூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கிவைத்தார்.
மழை நீரை சேமிப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தமிழக அரசு தேவையான நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் தூர் வாரி வருகிறது. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்தில் உள்ள கூரம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரியில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் கூரம்பாக்கத்தில் குடிமராமத்து பணிகளை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சனைகளை தீர்க்காத திமுக தான், முதுகெலும்பு இல்லாத கட்சி என கடுமையாக விமர்சித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2021ம் ஆண்டிலும் தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி மீண்டும் பொறுப்பேற்று மக்கள் நலத்திட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொள்வார் என தெரிவித்தார்.