முல்லை பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு நேரடியாக தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.
மதுரைக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முல்லை பெரியாறு லோயர் கேம்பிலிருந்து, மதுரை மாநகர் பகுதியில் உள்ள 100 வார்டுகளுக்கு, தங்குதடையின்றி தண்ணீர் கிடைக்கும் திட்டத்தினை, அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். சுமார் ஆயிரத்து 295 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலம், மதுரை மாநகருக்கு 50 ஆண்டுகள் தண்ணீர் பிரச்னை ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகள் அனைத்தும், 2023ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, நூற்றாண்டு பழமை வாய்ந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில், சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய கட்டடம் உள்ளிட்ட 69 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான 14 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டம், அம்மா இருசக்கர வாகன திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன் மூலம், 2 ஆயிரத்து 236 பயனாளிகளுக்கு, 3 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான நடத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.