சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் உள்ள அபிநவம் ஏரி தூர்வாரும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த முதலமைச்சர், விவசாயிகள் இடையே உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீர் இல்லாமல் வேளாண் பணிகள் கிடையாது என்று கூறினார். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு கூடுதலாக, ஆயிரத்து 829 ஏரிகள், 500 கோடி ரூபாய் மதிப்பில் பொதுப்பணித்துறை கீழ் தூர்வாரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு ஓய்வே கிடையாது என்று கூறிய முதலமைச்சர் பழனிசாமி, விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும் என்று உறுதியளித்தார். விவசாயம் ஒரு கடினமான தொழில் என்றும், அதை நாம் குழந்தை போல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். முன்னதாக விவசாய சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மக்கள் குறைத்தீர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதலமைச்சர், சேலம் முத்தம்பட்டி மற்றும் அயோத்தியப்பட்டினத்தில் ரயில் மேம்பாலம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். குறைதீர்க்கும் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது கண்டிப்பாக தீர்வு காணப்படும் என்று கூறிய முதலமைச்சர், எந்த மனுவும் நிராகரிக்கப்பட மாட்டாது என்று உறுதியளித்தார். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 13 ஆயிரத்து 296 மனுக்களை தான் பெற்றிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார்.