பூதக்கண்ணாடியை வைத்துப்பார்த்தாலும் குறைகாண முடியாது – அரசின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் பெருமிதம்!

 பூதக் கண்ணாடியை  வைத்து பார்த்தாலும் குறைகளை கண்டுபிடிக்க முடியாத அரசாக அதிமுக அரசு சிறப்பாக செயல்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய அவர் இதனை குறிப்பிட்டார். நாட்டிலேயே தொற்று நோயை கட்டுப்படுத்தும் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் விளங்குவதாகவும், திண்டுக்கலில் கட்டப்படும் புதிய அரசு மருத்துவக்கல்லூரி வரும் 2020-21ம் கல்வியாண்டு முதல், செயல்பட தொடங்கும் எனவும் அவர் கூறினார். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

தாம் முதலமைச்சராக பதவியேற்ற பின் மு.க.ஸ்டாலினும், எதிர்க்கட்சியினரும் அவதூறான பிரச்சாரம் செய்து வருவதாகவும், தவறான செய்திகளை பரப்பி வருவதாகவும் குற்றம்சாட்டினார். திண்டுக்கல் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளதாகவும், பூதக்கண்ணாடிகளை வைத்து பார்த்தாலும் அதிமுக அரசின் குறைகளை கண்டுபிடிக்க முடியாது எனவும், தாங்கள் நிறைகளையே செய்துள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். திண்டுக்கலில் மூன்றே மாதங்களில் 1612 முதியோர்களுக்கு அதிமுக அரசு ஓய்வூதியம் வழங்கியுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், திருப்பதி கோயிலை போல பழனி முருகன் கோயிலிலும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என கூறினார்.
முன்னதாக விழாவுக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்ற விவசாயிகள், அவருக்கு ஏர் கலப்பையை வழங்கினார்.மகிழ்ச்சியுடன் ஏர் கலப்பையை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், விவசாயிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும் விழா மேடையில் மேட்டூர் அணை, வயல்வெளிகள் போன்ற அமைப்புகள் வைக்கப்பட்டிருந்தன.

முன்னதாக பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், காவிரி விவகாரத்தில் திமுக – காங்கிரஸ் அக்கறை செலுத்தவில்லை என்றும், காவிரி உரிமையை மீட்டெடுத்தது அதிமுக அரசு தான் எனவும் கூறினார். விழா முடிவில், ஏராளமான பயனாளிகளுக்கு 64 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Exit mobile version