முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரடுக்கு மேம்பாலத்தை திறந்து வைத்தார்!

சேலத்தில் 441 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்திலேயே மிக நீண்ட ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சேலம் மாநகருக்குள் நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், அங்கு ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2016ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி, அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் இந்த பாலத்தின் திருத்திய மதிப்பீடு 441 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. தமிழகத்திலேயே மிக நீண்ட ஈரடுக்கு பாலமான, இதன் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும் பாலத்தில் போக்குவரத்தையும் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பாலத்தை திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய அவர், புதிய மேம்பாலத்தினால் சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாகக் குறையும் எனத் தெரிவித்தார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்தப் பாலத்திற்கு அவரது பெயரே வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதேபோல ஏ.வி.ஆர் பாலத்திற்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயர் வைக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். கொரோனா உயிர்பலி பற்றிய தகவல்கள் மறைக்கப்படுவதாக கூறும் தகவல்களில் உண்மையில்லை என்றும் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் கொரோனா மரணங்கள் அறிவிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். 

இதனைத் தொடர்ந்து பாலத்தில் பயணம் செய்து, கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் முதலமைச்சருடன், அதிமுக சட்டசபைக் கொறடா செம்மலை, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

 

 

Exit mobile version