ஆட்சியில் இல்லாதபோதும் ரவுடித்தனம், அராஜகம் செய்வது திமுகவின் வாடிக்கையாவிட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவத்தை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேச்சேரி பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர், ரவுடித்தனம் செய்கின்றனர் என்றார். அதிகாரிகளை மிரட்டி ஆட்சிக்கு வந்துவிடலாம் என ஸ்டாலின் நினைக்கிறார், அது நடக்காது என்றார்.
திமுக ஆட்சியில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றியதாக சரித்திரமே இல்லை என குற்றம்சாட்டிய முதலமைச்சர், இருளிலேயே வைத்திருந்த திமுகவிடம் இருந்து நாட்டு மக்களை மீட்டு வெளிச்சத்தை கொடுத்தவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா என்றார்.
திமுக என்றாலே வாரிசு அரசியல் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்தத் தேர்தலில் கூட 20 பேரின் வாரிசுகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளனர் என முதலமைச்சர் கூறினார்.
மேலும் திமுகவில் ஒரு அதிகார மையம் இல்லை, பல அதிகார மையங்கள் இருப்பதாக முதலமைச்சர் விமர்சித்தார். அதனால்தான் ஒவ்வொருவரும் தங்கள் வாரிசுகளுக்கு சீட் கேட்டு வாதிட்டு பெறுகிறார்கள் என தெரிவித்தார்.
ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என கருணாநிதி குடும்பமே சேலத்தை குறிவைத்து மாறி மாறி பிரசாரம் செய்கிறார்கள், ஆனால் சேலம் எப்போதுமே அதிமுகவின் கோட்டை, திமுகவால் வெற்றிபெற முடியாது என்றும் முதலமைச்சர் கூறினார்.