திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட நாச்சியார்கோவிலில் அதிமுக வேட்பாளர் யூனியன் எஸ்.வீரமணியை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுக, ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்று சதித்திட்டம் தீட்டியவர்தான் ஸ்டாலின் என குற்றஞ்சாட்டினார்.
யானையின் பலம் தும்பிக்கையில், அதிமுகவின் பலம் மக்கள் கையில் என கூறிய முதலமைச்சர்,
மக்கள் பேராதரவு தொடரும் வரை, ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என குறிப்பிட்டார்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியவர், ஸ்டாலின் என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், அந்த திட்டங்களை தடுத்து நிறுத்தியது தனது தலைமையிலான அதிமுக அரசுதான் எனவும் பெருமிதம் தெரிவித்தார்.
சட்டப்பேரவை தேர்தலோடு அதிமுக அழிந்துவிடும் என ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் பேசிவருகிறார் என கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தல் மூலமாகத்தான் அதிமுக மேலும் வலுப்பெறும் என்று கூறினார்.
மேலும், இந்த தேர்தலுக்கு பிறகு, திமுக என்ற கட்சியே இருக்காது என முதலமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான காமராஜை ஆதரித்து குடவாசல் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரித்தார்.
முன்னதாக டிராக்டரில் நின்றபடியே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் காமராஜும் பிரசாரம் செய்த போது,
அங்கு கூடியிருந்த பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும், காவிரி காப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று பெருமிதம் பொங்க ஆரவாரம் செய்தனர்.
பிரசாரத்தின் போது பேசிய முதலமைச்சர், அதிமுகவை அழிக்க முயற்சித்த ஸ்டாலினின் எண்ணத்தை தவிடுபொடியாக்கியதாக குறிப்பிட்டார்.
மேலும், நீண்ட காலமாக ஆட்சியில் இல்லாத காரணத்தால் விரக்தியின் விளிம்பில் ஸ்டாலின் பிதற்றுவதாகவும் காட்டமாக தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற திமுகவினர், வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், மக்கள் அவர்கள் மீது விரக்தியில் உள்ளனர் என்று கூறிய முதலமைச்சர்,
மீண்டும் அதிமுக ஆட்சி மலரவே தற்போது பொது மக்கள் விரும்புவதாக குறிப்பிட்டார்.
மூன்று மாதத்தில் முதலமைச்சர் ஆவேன் என ஸ்டாலின் கூறிவருவதை சுட்டிக்காட்டிய அவர், முதலமைச்சர் பதவி என்ன கடையில் விற்கும் பொருளா? என கேள்வி எழுப்பினார்.
யார் முதல்வராக வரவேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள் எனவும் கூறினார்.