திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதி விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக, சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சாத்தனூர் அணையிலிருந்து 2019 – 2020ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன என்றும், அந்த கோரிக்கையை ஏற்று, சாத்தனூர் அணையிலிருந்து, 7 ஆயிரத்து 543 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில், 756 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன் படி, பிப்ரவரி 5 ஆம் தேதி முதல், மார்ச் 10 ஆம் தேதி வரை, 35 நாட்களுக்கு தொடர்ச்சியாக தண்ணீர் திறந்து விடப்படும். அதே போன்று, திருக்கோவிலூர் அணைக்கட்டு பெண்ணையாறு பாசன பழைய ஆயக்கட்டிற்கு, ஐந்தாயிரம் ஏக்கர் இரண்டாம் போக சாகுபடிக்கு, ஆயிரத்து 200 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 12 ஆயிரத்து 543 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.