தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்..
சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு நிகழ்ச்சி மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சென்னை முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் வருகையை ஒட்டி மாமல்லபுரத்தில் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கென்று தனி ஒருங்கிணைப்பாளர்களையும் அரசு நியமித்துள்ளது.
கலை நிகழ்ச்சிகளின் போது இந்தியா மற்றும் சீன நாட்டு கொடிகளுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையை தொடர்ந்து சென்னை ரயில்களில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், கிண்டி வழித்தடத்தில் சிறிது நேரம் ரயில்கள் நிறுத்தப்படும் என்றும், புறநகர் மற்றும் விரைவு ரயில்கள், பல்லாவரம் பகுதியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு பிறகு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.