மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் நாளை மாலையுடன் பிரசாரம் நிறைவடையநிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் தேர்தல் வேலைகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், தமிழகத்தில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதனையொட்டி, இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிக்கான தேர்தலும், காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக வரும்18ம் தேதி நடைபெறுகிறது. இதில், 39 மக்களவை தொகுதியில் மட்டும் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதே போன்று 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.