அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்காக நீதிபதிகளுடன் விவாதிக்க உள்ளதால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இரண்டே முக்கால் ஏக்கர் நிலத்தை ராம் லல்லா, நிர்மோகி அகரா, சன்னி வக்பு வாரியம் ஆகியவை சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மூன்று தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கைத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் சரத் அரவிந்த் பாப்தே, அசோக் பூசண், சந்திரச்சூடு, அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஆகஸ்டு மாதம் முதல் தொடர்ந்து 40 நாட்கள் விசாரித்தது. நேற்றுடன் இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 17ஆம் தேதி ஓய்வு பெற நிலையில் உள்ள நிலையில் அதற்கு முன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதனால் துபாய், எகிப்து, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்ய ஏற்கெனவே திட்டமிட்டிருந்த தலைமை நீதிபதி, தீர்ப்புக் குறித்துப் பிற நீதிபதிகளுடன் விவாதம் நடத்த உள்ளதால், வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.