தேர்தல் நடத்தை விதிமுறைகள், செலவினங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் மக்களவை, 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட பத்து கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
தேர்தல் விதிமுறைகள், அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், தேர்தல் செலவினங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். இதைத்தொடர்ந்து தேர்தல் விழிப்புணர்வு பிரசாரம் தொடர்பாக இரண்டு குறுந்தகடுகளை சத்யபிரதா சாஹூ வெளியிட்டார்.