தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார். தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அரசியல் கட்சியினர், அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று இரவு சென்னை வருகின்றனர். இந்தக் குழுவினர், நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.
தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளனர். இதைத்தொடர்ந்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.