ப.சிதம்பரம் ஜாமீன் மனு – தீர்ப்பு ஒத்திவைப்பு

2007ஆம் ஆண்டு ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடு திரட்டியதில் விதிமுறைகளை மீறியதைக் கண்டுகொள்ளாமல் இருக்க அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி ஆகியோர் லஞ்சத்தைப் பல்வேறு நிறுவனங்களில் முதலீடாகப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ஜாமின் கோரிய சிதம்பரத்தின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்துச் சிதம்பரம் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் துசார் மேத்தா, சிதம்பரத்தைச் சிறையில் வைக்காமல் இருக்க அவர் ஒன்றும் குற்றமற்றவர் இல்லை எனக் குறிப்பிட்டார். இந்தப் பண மோசடியில் 16 நிறுவனங்களுக்குத் தொடர்புள்ளதாகத் தெரிவித்தார். 12 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு இதில் தொடர்புள்ளதாகவும், சிதம்பரத்துக்கு 16 நாடுகளில் சொத்துக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்றும், வழக்கின் விசாரணை பாதிக்கப்படும் என்றும் துசார் மேத்தா வாதிட்டார். இந்த வழக்கில் கார்த்தியைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்துச் சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Exit mobile version