கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகள் குறித்து விழிப்புணர்வு; இலவசமாக வழங்கப்பட்ட சிக்கன் பக்கோடா!
ஆதம்பாக்கத்தில் உள்ள கறிக்கடையில், கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இலவச சிக்கன் பக்கோடா வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. கோழி இறைச்சியால் கொரனா வைரஸ் பரவுவதாக ஏற்பட்ட வதந்திகளால் நாடு முழுவதும் கறிக்கோழி மற்றும் இறைச்சி விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள இறைச்சிக் கடையில் நூதன முயற்சி ஒன்றை மேற்கொண்டனர். அதன்படி, மொத்த கோழி வியாபாரிகள் சங்கம் சார்பில் 500 கிலோ அளவிலான பிராய்லர் கோழி இறைச்சியில் செய்யப்பட்ட, இலவச சிக்கன் பக்கோடா இலவசமாக வழங்கப்படும் என்று, அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள், அந்தக் கடையின் வாசலில் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று, இலவச சிக்கன் பக்கோடாவை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.