சத்தீஸ்கர் மாநில அமைச்சரவையில் 9 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக்கொண்டனர்.
சமீபத்தில் நடைபெற்ற சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 90 இடங்களில் 68 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து கடந்த 17-ம் தேதி பூபேஷ் பாகெல் அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரு மூத்த தலைவர்கள் மட்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இந்தநிலையில் அனைத்து தரப்பினரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முதலமைச்சர் பூபேஷ் பாகெல் முடிவு செய்தார். அதன்படி ராய்ப்பூரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் அனந்திபென் படேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.