நாகர்கோவில் அருகே சதுரங்கவேட்டை பாணியில் மோசடி

சதுரங்கவேட்டை பட பாணியில் இரிடியம் எனக்கூறி, பித்தளைக் குடத்தை காட்டி, பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்களை, நாகர்கோவில் அருகே காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பகீர் மோசடி குறித்த ஓர் சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த். சில நாட்களுக்கு முன் கடையில் டீ குடித்து கொண்டிருக்கும் போது, சுற்றியிருந்த 2 பேர் இரிடியம் வாங்கி வீட்டில் வைத்தால், செல்வம் பெருகும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பிய அரவிந்திடம், இரிடியத்தை வாங்க கண்ணன்பிரபுவை அணுகலாம் என அறிமுகப்படுத்தியுள்ளனர். அஞ்சுகிராமத்தில் லாட்ஜில் தங்கியிருந்த கண்ணன் பிரபு, நெல்மணிகள் போடப்பட்ட பெட்டிக்குள் இருந்த பித்தளைக் குடத்தை அரவிந்திடம் காட்டி, அதனுள் இரிடியம் இருப்பதாகவுகவும், அதன்மேல் கையை வைத்தால் ஒரு வித அதிர்வு ஏற்படும் என்றும் சொல்லியிருக்கின்றனர்.

கண்ணன் பிரபு கூறியதை உண்மை என நம்பிய அரவிந்துக்கு சுற்றி நின்றிருந்த நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த சதீஷ் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாகராஜனின் போதனைகள் ஒருவித நம்பிக்கை உணர்வை தந்திருக்கின்றன.

உடனே அரவிந்த் இரிடியத்தை தனக்கு விற்குமாறு கேட்க, கண்ணன்பிரபு, முன்பணமாக 25 ஆயிரம் ரூபாய் முதலில் தாருங்கள் என பணத்தைப் பெற்றுக் கொண்டு, சிறிது நாட்களில் செல்போனிலும் தொடர்பு கொள்ள இயலாத நிலைக்கு சென்றுவிட்டனர்.

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அரவிந்த் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பின் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கண்ணன்பிரபு, கேரளாவைச் சேர்ந்த நாகராஜன், நாகர்கோவிலைச் சேர்ந்த சதீஷ் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். மூவரிடமிருந்தும் 57 சவரன் தங்க நகைகள், 14 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒருவனை ஏமாத்தணும்னா கருணையை எதிர்பார்க்கக்கூடாது, அவன் ஆசையைத் தூண்டனும் என்பது சதுரங்கவேட்டை படத்தில் வரும் பிரபல வசனம். இந்த ஒரு வரியின் சாராம்சத்தின் அடிப்படையிலேயே பல மோசடிகள் அரங்கேறுகின்றன. அதை நுகர்வோராகிய நாம் தான் உணர்ந்து விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்….!

Exit mobile version