ஐ.பி.எல். லீக் சுற்றில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில், டாஸ்வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான விராட்கோலி, படிக்கல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட்கோலி 53 ரன்கள் சேர்த்திருந்தபோது அவுட்டாகி வெளியேறினார். படிக்கல் 70 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொதப்பியதால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சென்னை தரப்பில் பிராவோ 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர்களான கெய்க்வாட் 38 ரன்னும், டூ பிளஸ்ஸி 31 ரன்களும் சேர்த்து சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர். பின்னர் வந்த மொயீன் அலி 23 ரன்னும், ராயிடு 32 ரன்னும் சேர்த்து அவுட்டாயினர். சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 17 ரன்னும், கேப்டன் டோனி 11 ரன்னும் சேர்த்தனர். இதன் மூலம் சென்னை அணி 18.1 ஓவரில் 157 ரன்கள் சேர்த்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதன்மூலம் நடப்பு சீசனில் 7-வது வெற்றியை சென்னை அணி பதிவு செய்தது. 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய பிராவோ ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.