புனேயில் நடக்கும் மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சென்னை வீரர் ராம்குமார் பங்கேற்க உள்ளார்.
மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் வருகிற 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரதான சுற்றில் விளையாட இந்திய வீரர் ராம்குமார் ராமநாதனுக்கு ‘வைல்டு கார்டு’ மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர்.
சென்னையை சேர்ந்த 25 வயதான ராம்குமார் தரவரிசையில் 185-வது இடத்தில் இருக்கிறார். ராம்குமாருக்கு ‘வைல்டு கார்டு’ வழங்கப்பட்டு இருப்பதன் மூலம் தரவரிசையில் 131-வது இடத்தில் இருக்கும் இந்திய இளம் வீரர் சுமித் நாகலுக்கு ஒற்றையர் பிரதான சுற்றில் நேரடியாக களம் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே தரவரிசையில் 123-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு நேரடியாக விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் இருவர் நேரடியாக விளையாட வாய்ப்பு பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும்.