சி.எஸ்.கே – கொல்கத்தா அணிகள் இன்று மோதல் – தொடர் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை?

13-வது ஐ.பி.எல் போட்டிகள் துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது.

சென்னை அணியைப் பொறுத்தவரை, 5 போட்டிகளில் விளையாடி, 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. 4 போட்டிகள் விளையாடிய கொல்கத்தா அணி 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று 4 வது இடத்தில் உள்ளது.

அண்மையில் நடந்த போட்டிகளில் சொதப்பிய சென்னை அணி பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. இதற்கு பதிலளிக்கும் விதமாக கடைசியாக விளையாடிய ஹைதராபாத் அணியுடனான போட்டியில் விக்கெட் இழப்பின்றி வெற்றியைப் பதிவு செய்தது சி.எஸ்.கே. 

தொடர்ந்து 3 ஆட்டங்களாக சொதப்பி வந்த வாட்சன் கடைசி ஆட்டத்தில் 53 பந்துகளில் 83 ரன் எடுத்து மீண்டும் ஃபார்முக்கு வந்தார். அதே முனைப்பில் இந்த போட்டியிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரஞ்ச் கேப் போட்டியில் உள்ள ஃபாப் டு பிளிசிஸ் விளையாடிய அனைத்து போட்டிகளிலும், தனது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தி இந்த சீசனில் மொத்தம் 282 ரன்கள் எடுத்து 2 வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் கிங்ஸ் 11 பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் 302 ரன்களில் முன்னிலையில் உள்ளார். 20 ரன்களை கடக்கும் பட்சத்தில் முதல் இடத்தில் வருவார் ஃபாப் டு பிளிசிஸ்.

அம்பதி ராயுடு, தோனி, என பேட்டிங்கில் பக்காவாக உள்ள சென்னை அணி, ஆல்ரவுண்டர் சாம் கரன், ஜடேஜா ஆகியோர் மிடில் ஆர்டரில் இருப்பது பலம். பந்து வீச்சில் ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், பிராவோ என டீம் தனது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம்.

கொல்கத்தாவைப் பொறுத்த வரையில் நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றிகளும் இரண்டு தோல்விகளும் இருந்தபோதிலும், அவர்கள் இன்னும் சிறந்த பிளெயிங் லெவன் அணியைக் கட்டமைக்க வேண்டும். 

தொடக்க வீரராக களம் இறங்கும் சுனில் நரேன் இன்னும் ஒரு விளையாட்டில் கூட சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. சுப்மேன் கில் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் அவருக்கு பாட்னர்ஸ் அமையவில்லை சற்று தடுமாற்றத்துடன் காணப்படுகிறார். நிதீஷ் ராணா, மோர்கன், திரிபதி போன்ற பேட்ஸ்மன்கள் நிலைத்து ஆடினால் நல்ல இலக்கை எட்ட முடியும். பந்து வீச்சை பொறுத்த வரையில் மாவி நகர்கோட்டியும், சுழற்பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தியும் அணிக்கு பலம்.  கம்மின்ஸ் ஃபார்மில் இல்லாதது சற்று பின்னடைவு. கொல்கத்தா கேப்டன் ஃபார்மில் இல்லாதது அணிக்கு பலவீனம் தான்.

தனது வெற்றியை தொடர வேண்டும் என் சென்னையும், வெற்றிக்கு திரும்ப வேண்டும் என கொல்கத்தா அணியும் முனைப்பில் உள்ளது. இன்று யார் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது? உங்கள் கருத்தை hIPL கொண்டாட்டம் எனும் நிகழ்ச்சியில் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பரிசை வெல்லுங்க.

Exit mobile version