சென்னையில், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் திருடப்பட்ட காரை போலீசார் மீட்டனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக கணவர், மனைவி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாதவரம் பால் பண்ணை சி.கே.எம் காலனியில் வசித்து வருபவர்கள் விஜயன் – சரளா தம்பதி. ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரான சரளா, விடுமுறையை கழிப்பதற்காக தங்கள் குடும்பத்தோடு சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் திரும்பி வந்த போது, வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை, பத்தாயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மாதவரம் பால்பண்ணை காவல்துறையினர் நடத்திய விசாரணையில், எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தங்கமணி மற்றும் அவரது மனைவி ராணி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களிடம் இருந்து 12 சவரன் நகை மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர். கொள்ளையில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.