கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் மீண்டும் தங்களுக்கு தேவையான சானிடைசர்களை தாங்களே தயாரிக்கும் பணியில் சென்னை காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரக்கூடிய சூழலில் முன்களப் பணியாளர்களாக செயல்படும் காவல்துறையினர் மக்களை காப்பதோடு தங்களை தற்காத்துக் கொள்ளும் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பாடுபடும் காவல்துறையினர் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தகவல் தெரிவித்திருந்தார்.
முதல் அலையின்போதே 30 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், தற்போது இரண்டாம் அலையிலும் இரண்டு காவல்துறையினர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தங்களின் தற்காப்பை வலுப்படுத்தும் பொருட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருந்தியல் துறையின் உதவியுடன் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கில், தங்களுக்குத் தேவையான சானிடைசர்களை தாங்களே தயாரித்து காவல்துறையினருக்கு வழங்கி வருகின்றனர்.
கொரோனா தொற்றின் முதல் அலையின்போதே காவல்துறையின் ஆயுதப்படையைச் சேர்ந்த மருந்தியல் கல்வியில் தேர்ச்சி பெற்ற 10 ஆயுதப்படை காவலர்கள் மருந்தியல் துறை தலைவர் ஜெரால்டு சுரேஷ், மருத்துவர்கள் செல்வகுமார், டிட்டோ ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மூலப் பொருட்களை தேவையான அளவுக்கு கலந்து சானிடைசர்களை தயாரித்தனர்.
இந்த காவலர்கள் மூலம் தயாரிக்கப்படும் சானிடைசர்களின் தரத்தை மருத்துவர்கள் ஆய்வு செய்தபின்னர் 100 மி.லி மற்றும் 500 மி.லி பாட்டில்களில் அடைக்கப்படுகிறது.
பின்னர் சானிடைசர்களில் கலக்கப்பட்ட மூலப்பொருட்களின் அளவு குறித்த விகிதாச்சாரங்கள், காவல்துறையின் சின்னம் மற்றும் இது விற்பனைக்காக அல்ல என்ற வாசகம் உள்ளிட்டவை அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் அதில் ஒட்டப்பட்டு பெருநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், காவல்துறை சார்ந்த அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதல் அலையின்போது ஏறத்தாழ 10 ஆயிரம் லிட்டர் வரை இந்த ஆயுதப்படை காவலர்கள் மூலம் சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டு காவல்துறையினருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இரண்டாம் அலையின் தாக்கத்தை கருத்தில்கொண்டு காவல்துறையினரின் பாதுகாப்பு கருதி மீண்டும் சானிடைசர்கள் தயாரிக்கும் பணியை காவல்துறையினர் துரிதப்படுத்தியுள்ளனர்.
அதனடிப்படையில் தினசரி 500 லி வரை சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டு காவல்துறையினருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் நாள் மே 2 ஆம் தேதி வரவுள்ள நிலையில் முதற்கட்டமாக 3 ஆயிரம் லிட்டர் வரை சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டு சென்னையின் 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பிற்காக பணியாற்றும் ஆயுதப்படை காவல்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆயுதப்படைக் காவல்துறையினரைத் தொடர்ந்து பெருநகர காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், இந்த சானிடைசர்கள் மூலம் அனைத்து காவல்துறையினரும் தங்களின் பாதுகாப்பை வலுப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கட்டான இந்த காலக்கட்டத்தில் எத்தனை சவால்கள் இருந்தாலும், சென்னை போலீசார் கடமையில் கண்ணும், கருத்தாக இருப்பதோடு தங்களை பாதுகாத்துகொள்ள தயாரகி வருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நியூஸ் ஜெ செய்திகளுக்குகாக ஒளிப்பதிவாளர் அன்ட்ரோவுடன் செய்தியாளர் கதிரவன்.