சென்னையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியே சுற்றியவர்களின் வாகனங்களை, போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்த்னர்.
கொரோனா முழு ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் இ-பதிவு செய்யாதவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். போலி பதிவுகளை வாகன தணிக்கையில் பிடித்த போலீசார், உரிய காரணமின்றி வெளியே வந்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து, 500 ரூபாய் அபராதம் விதித்தனர். அதே வேளையில், முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் வசூலித்தனர்.
சென்னை பாரிமுனை கடை வீதியில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள் கூட்டம் அலைமோதியது. பாரிமுனை காய்கறி மார்க்கெட்டில் பாதுகாப்பு இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் உலவியதால், தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. பொதுமக்கள் ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்காமல், வழக்கம் போல் செயல்பட்டதை, மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் தடுக்கத் தவறியது, அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.