காமராஜர் நெடுஞ்சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து, இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த கார் மோதி பலியாகினர். இதில் இறந்தவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை 3.30 மணியளவில் மெரினா காமராஜர் சாலையில் அவ்வையார் சிலை எதிரே உள்ள அவ்வை சண்முகம் சாலையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கடற்கரை சாலைக்கு செல்ல முற்பட்டு திடீரென வலது புறமாக எந்த அறிகுறியும் இல்லாமல் வண்டியைத் திருப்பியுள்ளார். காமராஜர் சாலையில் சாந்தோம் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், திரும்பி குறுக்கே வந்த அந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டதில் பின்னால் வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வலதுபுறம் இருசக்கர வாகனத்தை திருப்பி விபத்துக்கு காரணமான நபருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காயமடைந்தவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தேவ் சர்மா என்பதும், வண்டலூரில் தங்கி படித்து வரும் அவர், நண்பரின் இருசக்கரத்தை வாங்கிக்கொண்டு, மெரினா கடற்கரைக்கு வந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார்.
உயிரிழந்த இருவரும் சகோதரர்கள் என்பதும் சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த பிரவீன், ரத்தன் என்பதும் விடுமுறை தினத்தில் வெளியே பொழுதுபோக்கிற்காக வந்துள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது..
இறந்தவர்களின் உடல் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது
இருசக்கர வாகனத்தில் வந்த தேவ்சர்மா என்பவர் தனது இருசக்கர வாகனத்தை எதிர்திசையில் திருப்பியதால், இருசக்கர வாகனத்தில் வந்த சகோதரர்கள் பிரவீன், ரத்தன் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த கார் அவர்கள் மீது இடித்து உயிர் இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து தேவ்சர்மா மற்றும் கார் ஓட்டுனர் அப்துல்சையது ஆகிய இருவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்துல் சையதை கைது செய்துள்ளனர். தேவ்சர்மா சிகிச்சையில் இருப்பதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Discussion about this post