ஆற்றல் மிகு நகரங்களில் சென்னை 5ஆம் இடம்

உலக அளவிலான ஆற்றல்மிகு நகரங்கள் பட்டியலில் சென்னை 5ஆம் இடத்தைப் பெற்றுள்ளது. அது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்ப்போம்

      
அமெரிக்க ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜோன்ஸ் லாங் லாசேல்லே (Jones Lang LaSalle) உலகின் ஆற்றல்மிகு நகரங்களின் பட்டியலைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. இந்தப் பட்டியலில் இடம்பெறும் நகரங்களுக்கு முதலீட்டாளர்கள் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள் என்பதால், இந்தப் பட்டியல் உலக அளவில் முக்கியத்துவம் மிக்க பட்டியலாக உள்ளது.
 
 
இந்நிலையில் தற்போது 7ஆவது ஆண்டாக வெளியிடப்பட்ட, உலகின் ஆற்றல் மிகு நகரங்கள் பட்டியலில் சென்னை 5ஆவது இடத்தைப் பெற்று உள்ளது. இந்தப் பட்டியலுக்காக உலகெங்கும் உள்ள 130நகரங்களில்  மக்கள் வளமும் தொழில் வளமும் மிக்க நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், சென்னைக்கு 5ஆம் இடம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
ஆய்வில் ஒவ்வொரு நகரத்தின் ஜி.டி.பி. வளர்ச்சி, வேலைவாய்ப்புகள், 20 முதல் 40 வயது வரை உள்ள திறன் மிக்க இளைஞர்களின் எண்ணிக்கை, தொழில் முதலீடு, ரியல் எஸ்டேட் நிலை, விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, வாடகை, பெருநிறுவனங்கள் – ஆகியவை உள்ளிட்ட 18 அளவுகோல்கள் கருத்தில் கொள்ளப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
 
இந்த ஆய்வில் கிடைத்த மதிப்பெண்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இறுதிப் பட்டியலில், முதல் 20 இடங்களில் பல்வேறு இந்திய நகரங்கள் இடம்பெற்று உள்ளன. மிக முக்கியமாக தமிழகத்தின் தலைநகரமான சென்னை 38 மதிப்பெண்களைப் பெற்று முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
 
ஜே.எல்.எல். நிறுவனத்தின் ஆய்வின் படி, கடந்த 2019ஆம் ஆண்டில் சென்னையின் ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி விகிதம் 8 முதல் 9 சதவிகிதமாக இருந்துள்ளது. இது கடந்த ஆண்டு இந்தியாவின் ஒட்டுமொத்த ஜி.டி.பி. வளர்ச்சி விகிதமாக இருந்த 5 சதவிகிதத்தை விடவும் 3 முதல் 4 சதவிதம் அதிகம் ஆகும்.
 
சென்னையில் காணப்படும் வெளிப்படைத் தன்மையுள்ள நிர்வாகமும், மக்கள் பாதுகாப்புக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமும், நிலைத்த நீடித்த வளர்ச்சியுமே சென்னைக்கு இந்தப் பட்டியலில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.
 
உலக அளவிலான ஆற்றல் மிகு நகரங்களின் பட்டியலில், சென்னை 5ஆம் இடம் பெற்றுள்ளது தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சிக்கு உலக அளவில் கிடைத்த நற்சான்றுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது.
 
இதே பட்டியலில் முதல் 20 இடங்களில் இந்தியாவின் பிற நகரங்களான பெங்களூரு, புதுடெல்லி, புனே, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களும் இடம்பெற்று உள்ளன.

Exit mobile version