"விலை போகும் போலீசார்" – போதை நகராகும் சென்னை..!

தும்பை விட்டு வாலை பிடிப்பதுபோல், காவல்துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், தலைநகரம் சென்னை கஞ்சா விற்பனையாளர்களின் கூடாரமாக மாறிவருகிறது.

கஞ்சா போதையால் இளைய தலைமுறையினர் தடம் மாறும் முன், இதனை தடுக்குமா காவல்துறை என்பதே… மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 

கஞ்சா என்றதும், தமிழகத்தின் தேனி மாவட்ட மலைப்பகுதிகள் சிலருக்கு நினைவுக்கு வரலாம்…. ஆனால், ஆந்திராவின் மலைப்பிரதேசங்கள்தான் கஞ்சா உற்பத்தி கேந்திரங்களாக இருப்பதாக சொல்லப் படுகிறது.

மலைப்பகுதி நிலங்களில் வளர்க்கப்படும் கஞ்சாவுடன், பிற நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட கோகைன், ஹெராயின், போதை ஸ்டாம்பு உள்ளிட்ட வஸ்துகளும் ஆந்திரா வழியாக சென்னையை வந்தடைவதாக கூறப்படுகிறது.

கூரியர் சர்வீஸ், பார்சல் சர்வீஸ், பால் வண்டி, சரக்கு வாகனங்கள், ரயில், அரசு பேருந்து, ஆட்டோ, இருசக்கர வாகனம் என்று, வெவ்வேறு வகைகளில் இவை சென்னை வந்தடைந்து, மாதவரம், செங்குன்றம், அம்பத்தூர், காசிமேடு, புளியந்தோப்பு, ராயபுரம், டி.பி சத்திரம், பட்டினப்பாக்கம், அண்ணாநகர், ஈசிஆர் என, பல பகுதிகளைச் சேர்ந்த சிறு வியாபாரிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

அதிலும், ரயில்களில் வரும் சரக்குகளை, பேசின்பிரிட்ஜ் பகுதிகளில் கிராஸிங்குக்காக ரெயில் மெதுவாக செல்லும்போது காய்கறி மூட்டைகளோடு கஞ்சா மூட்டைகளையும் தள்ளிவிட்டு, அவற்றை ஆட்டோ மூலம் எடுத்து செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆந்திராவில் 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்படும் 1 கிலோ கஞ்சாவை, சிறுசிறு பொட்டலமாக மாற்றி, தலா 200 ரூபாய் வீதம் விற்பனை செய்து, பல ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்கிறார்களாம் கஞ்சா விற்பனையாளர்கள்.

மழை வெள்ளத்துக்கு பின், சென்னையில் கஞ்சா போதை ஆறாகப் பாய்வதாகவும், பள்ளி மாணவர்களையும் அடிமையாக்கி, விற்பனையை அதிகரிக்கும் கொடுமை அரங்கேறுவதாகவும் சொல்லப்படுகிறது.

சென்னையில், ஒவ்வொரு வாரமும் கிலோ கணக்கில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல்காரர்கள் கைதாவதாக கணக்கு காட்டினாலும், கஞ்சா மாபியாக்களின் தலைமையையோ அல்லது ஆந்திராவில் இருந்து சென்னைக்கு அனுப்பும் கும்பலையோ இதுவரை நெருங்க கூட போலீசார் முயற்சிக்கவில்லை என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

மேலும், காக்கிகளில் சிலருக்கு சப்ளையாகும் கணக்கற்ற கரன்ஸிக்கள்தான் இதற்கு காரணம் என்கிறார்கள் அவர்கள்.போதையால், மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்வை தொலைத்து வரும் நிலையில்,

அவர்களை திருத்தி நல்வழிப் படுத்தவும், சமூகக் குற்றங்களை களையவும், கஞ்சா உள்ளிட்ட போதை நடமாட்டத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்பதே, அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

-நியூஸ் ஜெ செய்திகளுக்காக செய்தியாளர் கதிரவன் மற்றும் ஆசாத்….

Exit mobile version