ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய 12 லீக் போட்டி சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய சென்னை அணி நிதானமாக விளையாடியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் தோனி 46 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். சென்னை அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது.
176 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய ராஜஸ்தான் அணி, சென்னையின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 14 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது பரிதவித்தது. அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ் மட்டும் அதிகபட்சமாக 46 ரன்கள் குவித்தார். ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைபட்டபோது ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. கடைசி ஓவரை வீசிய பிராவோ 4 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை சூப்பர்கிங்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. ஆட்டநாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.