சென்னையில் காற்று மாசுவை குறைக்கும் வகையில், கோட்டூர்புரம் ரயில் நிலையம் அருகே, மியாவாக்கி பூங்கா அமைக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த பூங்காவின் சிறப்பு என்ன ? என்பதை காண்போம்.
சென்னை கோட்டூர்புரம் ரயில்நிலையம் அருகே, ஜப்பான் தொழில்நுட்பத்தைக் கொண்டு, மியாவாக்கி திட்டத்தின் மூலம் பூங்கா அமைக்க, சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், 21 ஆயிரத்து 600 சதுரஅடி பரப்பளவில், ஐந்து அடுக்காக, சுமார் 2 ஆயிரத்து 200 மரக்கன்றுகளை நட்டு, அடர்த்தியான பூங்கா அமைக்கும் பணிகளை, சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
முதல் அடுக்கில், கேனபி எனப்படும் பெரிய அளவிலான மரங்களும், 2வது அடுக்கில் பனை, தென்னை போன்ற உயரமாக வளரக்கூடிய மரங்களும், மூன்றாவது அடுக்கில் பழவகை மரங்களும், நான்காவது அடுக்கில் பூப்பூக்கும் வகையான செடிகளும், ஐந்தாவது அடுக்கில் கொடி வகைகளையும் அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சென்னையில், மக்கள்தொகை அடர்த்தி, வாகன நெரிசல் போன்ற காரணங்களால், காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காகவே, ஆண்டுக்கு 11 டன் கரியமில வாயுவை உறிஞ்சி எடுக்கும், அதிநவீன ஜப்பான் தொழில்நுட்பத்தால் ஆன, மியாவாக்கி பூங்கா அமைக்கப்படுகிறது. முதல் ஓர் ஆண்டுக்கு, 11 டன் வரையிலான கரியமிலவாயுவை, பூங்காவில் உள்ள மரங்கள் எடுத்துக்கொள்ளும்.
அதேபோல், முதல் ஆண்டில், நான்கு டன் அளவுக்கு, தூய்மையான காற்றை இந்த பூங்கா வெளியேற்றும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு 180 டன் அளவிலான, தூய்மையான காற்றை வெளியேற்றும் என்றும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கோட்டூர்புரம் ரயில் நிலையத்திற்கு அருகே இருக்கக்கூடிய இந்த இடத்தில், சுமார் 4 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, களிமண்ணை அகற்றிவிட்டு, மாநகராட்சி சார்பில் தயார் செய்யப்படும் உரங்களை கொட்டி நிரப்பி விட்டு, அதற்கு மேல், நாட்டு வகை மரங்களான புங்கை, பூவரசு, அரச மரம், ஆல மரம், மூங்கில் போன்ற மர வகைகளை அடர்த்தியாக நட்டு, பராமரிப்பது, இந்த மியாவாக்கி தோட்ட முறையின் திட்டமாகும். மேலும், முதல் மூன்று ஆண்டுகளுக்கு, இந்த பூங்காவை பராமரித்தால் போதும் என்றும், அதன் பின்னர், இந்த பூங்காவை பராமரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், காற்று மாசு அதிகரித்துவரும் நிலையில், வருமுன் காக்கும் வகையில், தமிழக அரசு எடுத்துள்ள இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிச்சயம் பாராட்டுக்குரியது.