சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கேபிள் அமைத்தற்கான தட வாடகை 3 கோடி ரூபாயை, சன் குழுமத்திற்கு சொந்தமான கல் கேபிள்ஸ் நிறுவனம் நான்கு வாரத்திற்குள் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. சன் குழுமத்திற்கு சொந்தமான கல் கேபிள் நிறுவனம், சென்னை முழுவதும் சாலைகள் வழியாக சுமார் 628 கிலோ மீட்டர் நீளத்துக்கு தங்களது கேபிள்களை கொண்டு செல்லும் நிலையில், அவற்றுக்கு தட வாடகையாக 2018- 2019 மற்றும் 2019- 2020 ஆண்டுக்கான தொகை 6 கோடியே 18 லட்சத்து 95 ஆயிரத்து 933 ரூபாயை செலுத்துமாறு மாநகராட்சி மின் கண்காணிப்பு பொறியாளர் சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டது. இந்த நோட்டீஸை எதிர்த்து கல் கேபிள் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையில், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை சார்பில் கடந்த 2000ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கேபிள் வயர்கள் பதித்தல் தொடர்பான ஒழுங்குமுறைச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த சட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ள தட வாடகையான 6 கோடியே 18 லட்சத்து 95 ஆயிரத்து 933 ரூபாயை நீக்க வேண்டும் எனவும் கல் கேபிள் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மாநகராட்சிக்கு தட வாடகை விதிக்க உரிமை இருப்பதாக குறிப்பிட்ட நீதிமன்றம், தட வாடகையாக விதிக்கப்பட்ட 6 கோடியே 18 லட்சத்து 95 ஆயிரத்து 933 ரூபாயில், 50 சதவீத தொகையான 3 கோடியே 9 லட்சத்து 47 ஆயிரம் ரூபாயை கல் கேபிள்ஸ் நிறுவனம் நான்கு வாரங்களில் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. நான்கு வார காலத்திற்குள் தொகையை செலுத்தாவிட்டால், கல் கேபிள் நிறுவனம் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை தொடரலாம் எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.