சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட வேண்டும்…

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சட்டவியல் முனைவர் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு நீதியரசர்கள் மூவருக்கு பட்டங்களை வழங்கி கவரவித்தார்.

சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்தில் நீதியரசர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கும் விழா குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்றது.கேரள மாநில ஆளுநரும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான சதாசிவத்திற்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதேபோன்று, உச்சநீதிமன்ற நீதிபதி ஷரத் அரவிந்த் போப்டே, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில்ரமானி ஆகியோருக்கும் முனைவர் பட்டங்களை குடியரசு தலைவர் வழங்கினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

விழாவில் உரையாற்றிய குடியரசு தலைவர், உயர் நீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட்டால் மக்களுக்கு எளிதில் சென்றடையும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். சட்டம் குறித்த அறிவை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளை தமிழிலும் வெளியிட வேண்டும் என்பது தனது விருப்பம் என்றும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் தமிழகத்தில் சுதந்திரமாக செயல்படுவதாக தெரிவித்தார். குறைந்த செலவில் சிறப்பாக சட்டக்கல்வியை தமிழக அரசு வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version