சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக, பாதுகாப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கடந்த 9ஆம் தேதி அன்று, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. டெல்லியை சேர்ந்த ஹதர்சன் சிங் நாக்பால் என்ற மர்மநபர் விடுத்த மிரட்டல் கடிதத்தில், வரும் 30ந் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபடப்போவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பாதுகாப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் உண்மைத் தன்மையை கண்டறியவும், பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதது. இந்த கூட்டத்தில், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன், உயர்நீதிமன்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையின் கமாண்டென்ட் ஸ்ரீ ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தமிழ்நாடு, பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர், சென்னை பார்கவுன்சில் தலைவர், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர், வழக்கறிஞர் கூட்டமைப்பு தலைவர் ஆகியோருக்கு சென்னை மாநகர காவல்துறை கூடுதல் துணை ஆணையர் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். உயர் நீதிமன்ற வளாகத்துக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில், அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version