தக்காளி லாரிகளுக்கு இடம் ஒதுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயம்பேடுக்கு தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு, ஒரு ஏக்கர் பரப்பளவிற்கு குறையாமல் இடத்தை ஒதுக்கித் தரவேண்டும் என்று, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மே மாதம் மூடப்பட்ட கோயம்பேடு தக்காளி மைதானம், இன்னும் திறக்கப்படவில்லை. இந்த சந்தையை திறந்தால் வெளி மாநிலங்களில் இருந்து வாகனங்களில் தக்காளியை கொண்டு வருவதால், கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், கோயம்பேடு சந்தையில் தக்காளி மைதானத்தை திறக்கக் கோரி, தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் சாமிநாதன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சி.எம்.டி.ஏ மற்றும் மார்க்கெட் கமிட்டி தரப்பில், கோயம்பேடு சந்தையின் கேட் எண் 14 அருகே உள்ள 3 ஏக்கர் இடத்தில், 1 ஏக்கர் அளவுக்கான இடத்தை தக்காளி லாரிகள் நிறுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்த நீதிபதி, தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், தற்காலிக சிறப்பு ஏற்பாடாக, ஒரு ஏக்கருக்கு குறையாமல் இடத்தை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தக்காளி வியாபாரிகளும் பயன்படுத்தும் வகையில் நான்கு வாரங்களுக்கு இடைக்காலமாக ஒதுக்கும்படி, சி.எம்.டி.ஏ மற்றும் மார்கெட் கமிட்டிக்கு உத்தரவிட்டார்.

நவம்பர் 30ஆம்தேதி காலை 4 மணி முதல் அந்த இடத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, அந்த இடத்தில் விற்பனை ஏதும் நடத்தக்கூடாது எனவும், பொருட்களை ஏற்ற இறக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

Exit mobile version