இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து தொடர்பாக காவல்துறை சம்மன் அனுப்பினால், நடிகர் கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கடந்த பிப்ரவரி 19 ம் தேதி ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10பேர் படுகாயமடைந்தனர். விபத்து தொடர்பாக கிரேன் ஆப்ரேட்டர் மீதும் தயாரிப்பு நிர்வாகி மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி, சம்பவம் குறித்து நடித்து காட்ட வேண்டுமென மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், தான் ஏற்கனவே கடந்த 3 ம் தேதி விசாரணைக்கு ஆஜராகி தனக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்து விட்டதாகவும், நடிகர் என்பதை தவிர அந்த விபத்துக்கும் தனக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லாததால் நேரில் ஆஜராக அனுப்பப்பட்ட சம்மனில் இருந்து தனக்கு விலக்களிக்க வேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, இன்று ஈவிபி பிலிம் சிட்டியில் விசாரணைக்கு ஆஜராக கமலுக்கு விலக்களித்து உத்தரவிட்டார்.