நித்தியானந்தாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பிடதி ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பிராணாசாமி என்பவரை மீட்கக் கோரிய வழக்கில், 4 வாரத்திற்குள் பதிலளிக்க, நித்தியானந்தாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் முருகானந்தம், கர்நாடகா மாநிலம் பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில், 2003ஆம் ஆண்டு சேர்ந்தார். பிறகு தனது பெயரை பிராணாசாமி என மாற்றி வைத்துக் கொண்டார்.

இதனிடையே, தனது மகனை சட்டவிரோதமாக ஆசிரமத்தில் அடைத்து வைத்துள்ளதாக கூறி முருகானந்தத்தின் தாயார் அங்கம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தொடர்பாக 4 வாரத்திற்குள் பதில் அளிக்க, ஈரோடு மாவட்ட காவல் துறைக்கும், நித்தியானந்தாவுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version