அறப்போர் இயக்கத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற கண்டனம்

அமைச்சர் மீதான குற்றச்சாட்டில் ஆதாரம் இருப்பதாக சமூக வலைத்தளங்கில் கூறும் அறப்போர் இயக்கம் நீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்யாதது ஏன் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தன் மீது அடிப்படை முகாந்திரம் இல்லாமல் அறப்போர் இயக்கம் பொது வெளியில் குற்றச்சாட்டு தெரிவித்து வருவதாக அமைச்சர் வேலுமணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டது. மனுவில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்ப அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக ஒரு கோடி ரூபாய் ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அமைச்சர் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து பதிலளிக்குமாறு அறப்போர் இயக்கத்திற்கும், அதன் ஒருங்கிணைப்பாளர்ஜெயராம் வெங்கடேசனுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்யாத அறப்போர் இயக்கத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, சமூக வலைத்தளங்களில் வசனம் எழுதுகிறீர்கள், ஆனால் நீதிமன்றத்தில் ஒரு பதில் மனு கூட தாக்கல் செய்யவில்லையே ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

முகநூலில் கருத்து பதிவிட்டால் மட்டும் போதாது, நீதிமன்றத்தில் உரிய பதிலையும், ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என அறப்போர் இயக்கத்திற்கு அறிவுரை வழங்கிய நீதிபதி, பல்வேறு சாலை பணி ஒப்பந்த நிறுவனங்களும் இதே போல அறப்போர் இயக்கம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதால், அந்த வழக்குகளோடு சேர்த்து இதையும் விசாரிப்பதாக கூறி வழக்கு விசாரணையை வரும் 12 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Exit mobile version