ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக வரும் 15-ம் தேதிக்குள் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் கவனத்தை ஆபாச வலைதளங்கள் சிதறடிக்க வாய்ப்புள்ளதால் அவற்றை அணுக முடியாத படி வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் ஆன்லைன் வகுப்புகளை செல்போன் மற்றும் லேப்டாப் மூலம் பார்ப்பதால் மாணவர்களின் கண் பார்வை பாதிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் மாணவர்களுக்கு ஏற்படும் கண் பாதிப்பு குறித்து அரசு கண் மருத்துவமனை டீன் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கர நாராயணன், வரும் 15-ம் தேதிக்குள் ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட உள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை ஆன்லைன் வகுப்புகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனும் மனுதாரர்களின் கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.