சாலை பணிகளை மேற்கொள்ளும் பொழுது விதிமுறைகளை பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வலியுறுத்தி உள்ளது. போக்குவரத்து காவல் துறையின் முன் அனுமதி பெற்று சாலை வெட்டும் பணி மேற்கொள்ள வேண்டும் என்றும் சாலை பணிகள் மேற்கொள்ளும் இடத்தில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் பராமரிப்பு மேற்கொள்ளும் இடங்களில் எச்சரிக்கை கருவிகள், தடுப்புகள், விளக்குகள் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இவற்றை கடைபிடிக்காமல் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.