பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 12 லட்சம் வீடுகள், பல்வேறு வணிக நிறுவனங்கள் உள்ளன. பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவும், புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணவும் சென்னை மாநாகராட்சி பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக ”நம்ம சென்னை” செயலி, 1913 என்ற தொலைபேசி எண் உள்ளிட்டவை மூலம் பொதுமக்கள் புகார்களை பதிவு செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.இந்நிலையில் இளைஞர்களை ஈர்க்கும் வகையில் சமூகவலைதளங்கள் மூலம் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சென்னை மாநகராட்சிக்கென பக்கங்கள் உருவாக்கப்படும். அவற்றில் பொதுமக்கள் தங்கள் புகார்கள், கருத்துகளை பதிவு செய்யலாம். புகார்கள் மீது தீர்வு காணப்பட்டு, அது தொடர்பான தகவல்கள் புகார்தாரர்களுக்கே நேரடியாக தெரிவிக்கப்படும். அதுமட்டுமின்றி சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவை உள்ளிட்டவை குறித்து டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் விளம்பரம் வெளியிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
இதற்காக 15 நாட்களுக்குள் டெண்டர் கோரப்பட்டு 3 மாதங்களில் திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளது. மேலும் இந்த திட்டத்துக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.