சென்னை அண்ணா நகரில் தி.மு.க பிரமுகருக்குச் சொந்தமான தனியார் பள்ளி ஆக்கிரமித்து வைத்திருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை சென்னை மாநகராட்சி மீட்டுள்ளது.
சென்னை அண்ணா நகர் மூன்றாவது அவென்யுவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒன்று புள்ளி 4 ஏக்கர் நிலத்தை தி.மு.க பிரமுகருக்குச் சொந்தமான தனியார் பள்ளி 1987-ம் ஆண்டு ஆக்கிரமிப்பு செய்தது. இதற்கு 1997ம் ஆண்டு பட்டாவும் பெற்றது. இதை கண்டறிந்த சென்னை மாவட்ட ஆட்சியர், பட்டாவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து பள்ளி நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆதாரத்துடன் எடுத்துரைத்தது. இதனை ஏற்று அந்த இடம் மாநகராட்சிக்கு தான் சொந்தம் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் இருந்த சுற்றுச்சுவரை இடித்து நிலத்தை அளவு எடுத்து மீட்டுள்ளனர்.