தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து இன்று 3 ஆயிரத்து 817 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளி பண்டிகைக்காக திங்கள் கிழமையும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, சனி, ஞாயிறு உட்பட நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாக உள்ளதால், தீபாவளி பண்டிகைக்குக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வபவர்கள் வெள்ளிக்கிழமை மாலையே புறப்பட்டு செல்ல தொடங்கினர்.
இந்தநிலையில் வெள்ளிக்கிழமை மாலை முதலே சிறப்பு பேருந்துகள் இயங்கத் தொடங்கியது. அதன்படி வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 275 பேருந்துகளுடன் 750 சிறப்பு பேருந்துகளும், சனிக்கிழமை அன்று ஆயிரத்து 300 சிறப்பு பேருந்துகளும் சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றன. அதேபோல் இன்று வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரத்து 275 பேருந்துகளுடன் ஆயிரத்து 542 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3 ஆயிரத்து 817 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் திங்கள் கிழமை வரை 250 சிறப்பு இணைப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.