வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் குடியிருப்போர் வெளியேறும் அவலம்

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் இன்னலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

தாம்பரம் அடுத்த முடிச்சூர், மண்ணிவாக்கம், வரதராஜபுரம், பரத் நகர், பி.டி.சி., காலனி உள்ளிட்ட பகுதிளை மழை நீர் சூழ்ந்து தனித்தீவு போன்று காட்சியளிக்கிறது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், குடியிருந்தவர்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் தாம்பரம் – மணிமங்கலம் சாலையிலும் மூன்று அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மழையினால் கூடுவாஞ்சேரி அருகே உள்ள வல்லாஞ்சேரி ஏரியில் உடைப்பு ஏற்பட்டு, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இருபுறமும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் கனரக வாகனங்களும், இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு இடையே சாலையை கடந்து செல்கின்றனர்.

இதேபோன்று, சிங்கபெருமாள்கோவில் அருகிலும் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நீரை அப்புறப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Exit mobile version