செங்கல்பட்டு இரட்டை கொலை வழக்கில் இரண்டு ரவுடிகள் என்கவுன்டரில் கொல்லப்பட்ட நிலையில் எஞ்சிய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து அடைத்தனர்.
செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றில் கையெழுத்து போட்டு விட்டு, எதிரில் உள்ள டீக்கடையில் டீ குடிக்க வந்த அப்பு கார்த்திக் மீது 3 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் சரமாரியாக வெட்டியும் நேற்று முன்தினம் கொலை செய்தது.
சிறிது நேரத்தில் அங்குள்ள வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்த மகேஷ் குமார் என்பவரை சரமாரியாக வெட்டியும் கொலை செய்து விட்டும் அந்த கும்பல் தப்பியோடியது.
உத்திரமேரூர் அடுத்த இருங்குன்றம் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை பிடிக்க முயன்றபோது, போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு குற்றவாளிகள் தப்ப முயன்றதாகவும், அதனால் தினேஷ், மொய்தீன் ஆகிய இரண்டு ரவுடிகள் என்கவுன்டரில் சுட்டு கொன்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த ஜெசிகா மற்றும் அவரது கூட்டாளி மாதவன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெசிகாவை புழல் சிறையிலும் மாதவன் செங்கல்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர்.