தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக் கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய ஆளுநர் பதிவியேற்பு நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் தங்கமணி, சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோரும் பங்கேற்றனர். ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்ட ஆர்.என்.ரவிக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் தங்கமணி, சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோரை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.
ஆளுநர் பதவியேற்பு நிகழ்வில் திமுக அரசு மரபைக் காக்கவில்லை என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திமுகவினர், முதல் 7 வரிசைகளில் அமைச்சர்கள் உள்ளிட்ட திமுகவினருக்கே ஒதுக்கியிருந்தனர். முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு 8-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை விமர்சித்த அரசியல் நோக்கர்கள், கடந்த அதிமுக அரசு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவியேற்பின்போது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு முதல் வரிசையிலேயே இடம் ஒதுக்கியதாக குறிப்பிட்டனர்.