காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, மக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என குடியரசுத் தலைவர் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டு மக்களுக்கு உரையாற்றினர். நாட்டின் பிற பகுதிகள் போல், காஷ்மீர் மக்களும் சம உரிமை பெற்று வாழ வாய்ப்பு கிடைத்துள்ளதாக குடியரசுத் தலைவர் தனது உரையில் தெரிவித்தார். இந்தியா இளைஞர்களின் கையில் இருப்பதாகவும், இளைஞர்கள் அனைவரும் தற்போது சரியான திசையில் பயணிக்கிறார்கள் என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். நாம் அனைவரும் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் என்று கூறிய குடியரசுத் தலைவர், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே சட்டம் இருக்கிறது என்றார். இந்த பொன் நாளில், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த தலைவர்களை நாம் போற்ற வேண்டும் என்று ராம்நாத் கோவிந்த் தனது உரையில் தெரிவித்தார்.