நிலவை ஆய்வை செய்யும் சந்திரயான் 2 விண்கலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஜிஎஸ்ல்வி மாக்-3 ராக்கெட் இந்த விண்கலத்தை ஏந்திச் சென்றது.
நிலவை ஆய்வு செய்ய சந்திரயான் 1 விண்கலத்தை இந்தியா 2008ம் ஆண்டு வெற்றிகரமாக செலுத்தி சாதனை படைத்தது. சந்திரயான் -1 மேற்கொண்ட ஆய்வின் மூலம் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சந்திரயான்-2 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்ய உள்ள சந்திரயான் – 2, கடந்த 15ம் தேதி அதிகாலை 2:51க்கு விண்ணில் செலுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. கடைசி நேரத்தில் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து விண்கலத்தை செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், சந்திரயான் 2 விண்கலத்தை இன்று விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்தது. இதற்கான தொழில்நுட்ப ஒத்திகைகள் வெற்றிகரமான நடத்தப்பட்டன. இந்தநிலையில், பிற்பகல் 2.43 மணி அளவில் சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
இந்தியாவின் ஜிஎஸ்எல்வி. மாக்-3 ராக்கெட் சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏந்திச் சென்றது. இதன் மூலம் விண்வெளி ஆய்வில் இந்தியா புதிய மைல் கல்லை எட்டி உள்ளது. சந்திரயான்-2 விண்கலம் 48 நாட்கள் பயணித்து 15 கட்டங்களை கடந்து நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும். நிலவில் சந்திரயான்-2 விண்கலம் மேற்கொள்ள உள்ள ஆய்வுகள் மூலம் பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், புவி சுற்று வட்ட பாதையில் சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது